யோசியா கொண்டுவந்த சீர்திருத்தங்கள் விக்கிரகங்களை அகற்றுவதோடு நின்றுவிடவில்லை. பாழடைந்திருந்த தேவாலயத்தையும் அவன் சீரமைத்தான். அந்த வேலையில் ஆசாரியர்கள் மட்டுமல்ல; கணக்குப் பார்த்தவர்கள், மேற்பார்வையாளர்கள், தச்சர்கள், சுமை தூக்கிய லேவியர்கள் எனப் பலர் இணைந்தனர். மேடையில் தெரியாதவர்கள். புகழ் பெறாதவர்கள். ஆனால் தேவனுடைய பணியில் அவர்களுக்கும் முக்கிய இடம் இருந்தது.
ஆவிக்குரிய புதுப்பிப்பு உணர்ச்சியில் மட்டும் தெரியாது. பணத்தை நேர்மையாகக் கையாளுவதிலும், கொடுக்கப்பட்ட பொறுப்பை நன்றாகச் செய்வதிலும், நேரத்தை உண்மையுடன் பயன்படுத்துவதிலும் அது வெளிப்படும். கல் சுமந்தவனும், கணக்கு பார்த்தவனும், ஆசாரியரைப் போலவே தேவனுடைய பணியில் பங்கெடுத்தவர்கள். யாரும் கவனிக்காத இடத்தில் உண்மையுடன் செய்யும் வேலை, எல்லோரும் பார்க்கும் மேடையில் செய்யும் சேவையைவிடக் குறைந்ததல்ல. மனிதர்கள் கவனிக்காமல் போகலாம்; ஆனால் தேவன் காணாமல் போவதில்லை.
